பாலைவன ஒட்டகம்


WRITE YOU COMMENTS

1. தனித்தன்மை
2. உணவு பயன்பாடு
3. எண்ணிக்கையும் பரவலும்

ஒட்டகம் என்பது பொதுவாக பாலைவனங்களில் வாழும் தாவர உண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்கு ஆகும். பொதுவாக ஒட்டகம் என்று அழைக்கப்படும் ஒட்டகப் பேரினத்தில் ஆறு சிற்றினங்கள் உள்ளன. இவை ஆசியா, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பாலைநிலங்களை தாயகமாகக் கொண்டவை. இவை பொதுவாக 30 முதல் 50 ஆண்டுகள் வரை உயிர்வாழ்கின்றன.

ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும் ஒட்டகங்கள் அவற்றின் பால், இறைச்சிக்காகவும் சுமைகளை ஏற்றிச் செல்லவும் பயன்படுகின்றன.

ஒட்டகத்தின் மிகவும் புகழ்பெற்ற பண்பு, நீரில்லாமல் பலநாள் வாழக்கூடியது. பொதுவாக 4-5 நாட்கள் நீர் அருந்தாமல் பாலைநிலப்பகுதிகளில் வாழக்கூடிய தன்மை அதற்கு உண்டு. மேய்வதற்குப் புல் போன்ற உணவு கிடைத்தால் 10 மாதங்கள் வரையிலும் கூட நீர் அருந்தாமல் இருக்கக்கூடியது [2]. மற்ற விலங்குகளைப் போலல்லாமல், நீர் அருந்தாமல் இருந்த நிலையாகிய உலர் நிலையில் இருந்து மீண்டு நீர் அருந்தும்பொழுது ஏறத்தாழ 100 இலிட்டர் நீர் அருந்தவல்லது. அப்படி நீர் அருந்தியவுடன் 5-10 நிமிடங்களில் உடலில் நீர்ப்பதம் ஏறிவிடுகின்றது. பிற விலங்குகளில் நீரற்ற உலர் நிலையில் இருந்து இவ்வாறு விரைவாக நீர்ப்பதம் அடைய முடியாது (ஏனெனில் இரத்தத்தில் திடீர் என்று இவ்வளவு நீர்த்த நிலை ஏற்பட்டால் சிவப்புக் குருதியணுக்கள், ஆசுமாட்டிக் அழுத்தம் என்னும் அடர்த்தி அதிகமான பகுதி நோக்கி நகரும் விரவல் விளைவால், வெடித்துவிடும். ஆனால் ஒட்டகத்தின் சிவப்பணுக்களின் சவ்வுப்படலம் அதிக அளவு விரிந்து கொடுக்கும் தன்மை கொண்டதால், இவ்வாறு நிகழ்வதில்லை) 

ஒட்டகத்தின் உடலின் வெப்பநிலை 34° செல்சியசு முதல் 41° செ (106 °F) வரை மாற வல்லது. ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, மனிதர்களின் உடல் வெப்ப நிலை 2-3° செல்சியசு வேறுபாடுகளைத்தான் தாங்க வல்லது. இது தவிர, ஒட்டகங்களின் உடல் பொதுவாக வியர்வையை வெளியிடுவதில்லை. இதனால் உடல்நீர் வெளியாவது குறைகின்றது. நீரில்லாத பொழுது, தன்னுடைய சிறுநீரையும் பெருமளவு குறைக்கவல்லது. இவ்வகையான உடலமைப்புகளால் நீரற்ற பாலைநிலங்களில் பயணம் செய்ய மிகச்சிறந்த விலங்காகக் கருதப்படுகின்றது.

தனித்தன்மை
ஒட்டகத்தின் மயிரும், தோலும் வெப்பத்தடுப்பானாக பயன்படுகிறது அதன் சிறப்பம்சமாகும். கடும் குளிருக்கும் வெயிலுக்கும் ஏற்ப ஒட்டகம் தன் உடலின் வெப்பநிலையை 34 °செல்சியசிலிருந்து 41.7 °செ வரை (93 °F-107 °F.) தானாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டது. இப்படி தன் உடல் வெப்பத்தை அதுவாகவே குளிரில் 34° செல்சியசு வரை குறைத்துக்கொள்வதால், வெளியில் உறைபனி நிலையில் கடுங்குளிர் காற்று அடித்தாலும் தாக்குப்பிடிக்கமுடிகிறது. கடும் கோடை வெப்பக்காலங்களில் வெளியில் 55° செல்சியசு என்று வெப்பநிலை உள்ள போது, வெப்பம் கடத்தாத தன் தடிமனான தோலினாலும், தன் உடல்வெப்பநிலையை 41° செல்சியசு வரை கூட்டிக்கொண்டும், தன் உடல் வியர்வையை வெளியிடாமலேயே கடும் வெப்பத்திலும் தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல்நீர் வியர்வை மூலம் விரயமாவதும் தடுக்கப்படுகின்றது. ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்க கூடியது. சிறுதொலைவு ஓட்டம் ஒன்றை மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடி முடிக்கக் கூடியது. ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகம் ஏழு அடி உயரமும், 400 முதல் 600 கிலோ எடையும் இருக்கும். ஒரு நன்கு வளர்ந்த ஒட்டகத்தின் திமில் 75 செ.மீ. உயரம் இருக்கும். 40 முதல் 50 ஆண்டுகள் இவை உயிர் வாழும். அதிகப்பட்சமாக 65 கி.மீ. வேகத்தில் ஓடும் இவற்றால் சராசரியாக 40 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து ஓட இயலும். பெரும்பாலான நாடுகளில் ஒட்டகங்கள் பொதி சுமக்கும் விலங்குகளாகவும், வண்டி இழுக்கவும் பயன்படுத்துகின்றனர். பாலைவனப் பகுதிகளில் இராணுவத்திலும் அதிகமாக பயன்படுத்துகின்றன.குடிக்கும் நீரில் குறிப்பிட்ட அளவு நீரை முதலில் இரத்தத்தின் சிகப்பு அணுக்களுக்கு அனுப்புகிறது. அதற்காக இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 2.4 மடங்கு விரிந்து இடமளிக்கிறது. குட்டி போட்டு பாலூட்டும் மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும்.ஒட்டகத்தின் உடலில் 40% நீர் குறைந்தாலும் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும் சிறப்பம்சம் கொண்டது.பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள். ஏற்கனவே வயிற்றில் சேமித்து வைத்திருந்த தண்ணீர் தீரும் நிலையை அடைந்து விடடால் தனது மூக்கால் மோப்பமிட்டு நீர் நிலையை அடைந்து கொள்ளுதல் சிறப்பம்சமாகும்.

உணவு பயன்பாடு
பால்
ஒட்டக பால் பாலைவன நாடோடி பழங்குடியினரின் பிரதான உணவுகளில் ஒன்று. ஒரு நாடோடி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒட்டக பால் மட்டுமே குடித்து வாழ முடியும் ஒட்டக பாலில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதங்கள், மற்றும் இம்யுனோக்ளோபுலின்ஸ் அதிகமாக உள்ளது. மேலும் பசுவின் பாலுடன் ஒப்பிடும்போது, கொழுப்பு மற்றும் லாக்டோஸ் குறைந்த அளவும் பொட்டாசியம், இரும்பு, மற்றும் வைட்டமின் சி அதிகமாகவும் உள்ளது.

இறைச்சி
சோமாலிய ஒட்டகக்கறி உணவுவகை.
ஒட்டக இறைச்சி பல நூற்றாண்டுகளாக சாப்பிடப்பட்டு வருகிறது. ஒட்டக இறைச்சி இன்னும் , சோமாலியா, சீபூத்தீ, சவூதி அரேபியா, எகிப்து, சிரியா, லிபியா, சூடான், எதியோப்பியா, கசக்ஸ்தான் போன்ற பகுதிகளில் உண்ணப்படுகிறது.

எண்ணிக்கையும் பரவலும்
2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுமார் 14 மில்லியன் ஒட்டகங்கள் உயிர் வாழ்வதாக நம்பப்படுகிறது. இவற்றில் 90% அராபிய ஒட்டகங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்று உயிரோடிருக்கும் அராபிய ஒட்டகங்கள் வீட்டு விலங்குகளாக உள்ளன. சாகெல், மக்ரிபு, மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா போன்ற ஆப்பிரிக்காவின் வெளிப்புற நீட்சிகளில் இவை பெரும்பாலும் வாழ்கின்றன. இந்த கொம்பு போன்ற நீட்சிப் பகுதியில் உலகத்தில் உள்ள ஒட்டகங்களில் பெரும்பாலானவை காணப்படுகின்றன. இதில் அராபிய ஒட்டகங்கள் உள்ளூர் நாடோடிகளின் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக திகழ்கின்றன. சோமாலியா நாட்டில் மிகப்பெரிய ஒட்டக மந்தைகள் உள்ளன.பால், உணவு மற்றும் போக்குவரத்து ஆகியவற்றுக்காக எத்தியோப்பியாவிலும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன.

பாக்டிரியன் எனப்படும் இரட்டைத் திமிங்கில ஒட்டகங்கள் 2010 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி சுமார் 1.4 மில்லியன் ஒட்டகங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டது. இவற்றில் பெரும்பாலானவை வீட்டு விலங்குகளாக உள்ளன. காட்டு இரட்டைத்திமிங்கில ஒட்டகங்கள் மட்டுமே வேட்டையாடும் விலங்காக இருக்கின்றன. இவை தோராயமாக 1400 ஒட்டகங்கள் மட்டுமே வாழ்ந்திருந்ததாகக் கூறப்பட்டது. இவை சீனாவிலும் மங்கோலியாவிலும் உள்ள பாலைவனங்களில் மட்டுமே காணப்பட்டன.

மிக அதிக அளவிலான காடுவாழ் ஒட்டகங்களின் எண்ணிக்கை ஆத்திரேலியாவில் காணப்படுகிறது. ஆத்திரேலியாவின் மத்திய பகுதிகளில் ஏறக்குறைய 700,000 பழங்கால அராபிய ஒட்டகங்கள் உள்ளன, அவை 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் போக்குவரத்துக்காக முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. ஆண்டுதோறும் இவ்வொட்டகங்களின் எண்ணிக்கை 8% அளவுக்கு அதிகரித்தது. ஆத்திரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள், இந்த ஒட்டகங்களில் 100,000 க்கும் அதிகமான ஒட்டகங்களை, ஆடுகளுக்கான வளங்களை குறைக்கின்றன என்ற காரணத்தினால் சேதப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க ஒட்டகப் படை பரிசோதனையின் ஒரு பகுதியாக 19 ஆம் நூற்றாண்டில் இறக்குமதி செய்யப்பட்ட அராபிய ஒட்டகங்களும், இரட்டைத்திமிங்கில ஒட்டகங்களும் தென்மேற்கு அமெரிக்காவில் அலைந்து திரிந்தன. திட்டம் முடிவுற்றவுடன் அவை சுரங்கங்களில் பயன்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டன. கரீபூ கோல்ட் ரச்சு காலத்தில் இருபத்தைந்து அமெரிக்க ஒட்டகங்கள் கனடாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன.